இருளுக்குள் ஓர் இசைச்சுடர்:

இருலுக்குள் ஓர் இசைச்சுடர்:



இசை என்பது வெறும் கலை மட்டுமல்ல. அது ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகை செய்யும் உடல் இயக்க மேம்பாட்டின் அடிநாதமாகும். குழந்தை பருவத்தில் கிடைக்கும் தாலாட்டு இசை என்பது உடலின் சீரான வளர்ச்சிக்கு வித்திடும் தொன்மையான மருத்துவ முறை என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கக்கூடும். தாளாட்டு பாடல்கள் தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களின் சீரான இயக்கத்திற்கு வித்திடுவதோடு மட்டுமல்லாமல், குரல்களின் வழியே கடத்தப்படும் மென்மையான இசை அக் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வையும் தரவல்லதாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக, அக்குழந்தை பார்வையற்று இருக்க நேர்ந்தால் தாலாட்டின் தேவை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. ஆனால் அத்தகைய பார்வையற்ற குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த மேம்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தாலாட்டு என்பது அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கின்றதா என்று சிந்தித்தோமே யானால், அதற்கு இல்லை என்ற பதிலே பெரும்பான்மையை பெற்றுவிடுகின்றது. தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள பிள்ளைத்தமிழ் காப்பியங்களில், குழந்தையின் ஏழாம் மாதத்து செயல்பாடுகளை மையமாகக் கொண்டு தாழப்பருவ பாடல்கள் புனையப்பட்டுள்ளன. பார்வை சவாலுடன் பிறந்த ஒரு குழந்தை இப்பருவத்தில் எத்தகைய கற்றலை மேற்கொள்கின்றன என்பதை பற்றியும், அது அக்குழந்தையின் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை பற்றியும் இனி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.


தாலாட்டு பருவம் மூன்றாவதாக சொல்லப்படுவதில் தனித்த முக்கியத்துவம் பெறுகிறது. மூளை வளர்ச்சி, மொழி மேம்பாடு மற்றும் சுற்றுப்புறத்தை ஒலிகளின் வழியே கட்டமைத்தல் ஆகிய மூன்றும் நடப்பதால் அவ்விடம் சிறப்புக்குரியதாகி விடுகிறது. பார்வையற்ற குழந்தைகளுக்கு இம்மூன்றையும் இந்த பருவம் அபரிவிதமாக கடத்துகிறது. அன்னையின் தாலாட்டு இசை பார்வை இழந்த குழந்தைக்கு அகிலத்தையே அறிமுகப்படுத்துகிறது. உறக்கத்தை தூண்டுகிற வெறும் சப்தம் என இதனை சுருக்கிவிட முடியாது. காரணம், தாலாட்டு பாடப்படும் பொழுது வெளிக்கொணரப்படும் ஓசை, நரம்புகளோடு பின்னிப்பிணைந்து உணர்வுகளை செப்பநிடுகின்றன. தாலாட்டின் எதிரொளிப்பு தாயின் உருவத்தையும் சுற்றுப்புறத்தையும் பார்வையற்ற குழந்தை மனதில் உள்வாங்கிக் கொள்ள காரணமாக இருக்கிறது. ஆசையாக பாடப்படும் தாலாட்டை வைத்து, ஓசை மிகு உலகத்தில் பார்வையற்ற குழந்தை பயணப்படுவதை அறிவியல் உலகம் பெரிதாக இது காறும் அங்கீகரிக்கவில்லை. அங்கனம் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதையும் உணர்ந்ததாகவும் தெரியவில்லை! உணர்வின் உலகத்தை ஓசை வழியே மேம்படுத்துவதை புறக்கணித்தல் சவால் மிக்க குழந்தைகளின் கல்வி மற்றும் பணி வாய்ப்பை இன்று வரை பாதிக்கின்ற ஒன்றாக இருப்பதனால் இதனை சுட்டிக்காட்ட வேண்டியதாக இருக்கிறது! இத்தகைய அலட்சியத்தில் காணக் கிடைக்கும் அரசியலை இது போன்ற நுட்பமான கண்ணோட்டத்தை மேற்கொள்வதன் மூலமாக மட்டுமே எடுத்துக்காட்டிட இயலும்!


தாயின் தாலாட்டு பார்வையற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வினை அதிகம் தருகின்றது. இசை நயமிக்க தாயின் தாலாட்டு, ஓசை வடிவம் தரித்து அறிவாக குழந்தையின் புத்தியை சென்றடைகின்றது. கண்களுக்கு சற்றும் சளைத்திடாத அறிவின் உற்ற நண்பனாக செவிகள் செயலாற்றிட இப்பருவமே அடித்தளமிடுகின்றது. அத்தகைய தாலாட்டு பாடப்படுவதில் மிக முக்கியமான கருவியாக செயல்படுவது நாக்கு. அதனை இசையோடு கலந்து, சொற்களை இணைத்தபடியே அசைக்கின்ற பொழுது, காண முடியாத குழந்தை, மாறுபட்ட ஆற்றலை பிரயோகிக்க தொடங்கி விடுகின்றது. அதாவது கேட்டலின் வழியே சிந்தைக்குத் தேவையான தரவுகளை துள்ளல் மிக்க தாலாட்டின் வழியே எடுத்துச் செல்லுகிற ஆற்றலை அக்குழந்தை வெகு லாவகமாக கைப்பற்றிக் கொள்கின்றது. பார்வையுள்ள குழந்தை தாலாட்டு பாடுகிற நாவினை கண்டு, அதனை பயிற்சி செய்து பார்ப்பது இயல்பே. அதுவே ஒரு பார்வையற்ற குழந்தையாக இருப்பின், நாவின் ஓசையை துல்லியமாக கவனித்து, அதனை மறு உற்பத்தி செய்ய விழைவது பெரும் வியப்பிற்குரியது! நுட்பமான கவனித்தல் மற்றும் கற்பனைதனை பட்டை தீட்டுதல் மூலமாக அத்தகைய ஆச்சர்யம் அரங்கேற்றப்படுகிறது. தாலாட்டு இசைச்சுவையுடன் நகர்வதை வைத்து, காணவியலாத அந்தக் குழந்தை, தாயின் உடல் அசைவுகள், அவளின் உயரம், தாயின் நகர்விற்கும் இதர பொருட்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய இடைவெளி போன்றவற்றை கிரகித்துக் கொள்ளவும் தலைப்படுகின்றது. அத்தாலாட்டிற்கு மறுமொழி தருகின்ற முயற்சியில் வெளிக்கொணரப்படும் குழந்தையின் சிரிப்பு, அழுகை மற்றும் இதர சத்தங்களை எதிரொலிப்பதும் இத்தகைய சுற்றுப்புற அறிதலுக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கின்றன என்பது பெரும் ஆச்சரியத்திற்கு உரியது. ஓசைகள் பயணப்பட்டு சுவர்கள் உள்ளிட்ட இதர பொருட்களின் மீது மோதுவதை வைத்து, எத்தகைய நீளமும், உயரமும், அகலமும் கொண்ட அறை மற்றும் பொருட்களை தான் சார்ந்து இருக்கிற சுற்றுப்புறம் பெற்றிருக்கிறது என்பதனை அக்குழந்தை ஒருவாறு மணக்கண்ணின் முன் கொண்டு வருவதற்கான பயிற்சி பெறுகின்றது! எல்லாவற்றிக்கும் அடிப்படையாக தாய் என்பவள் தாலாட்டு ஓசையின் அன்பு குவியலாக அக்குழந்தைக்கு தென்படுகிறாள்! 


தன்னுடைய உலகத்தை தானே நிருவகிக்க, சத்தங்களை வெளிச்சமென உருமாற்றி , வாழ்க்கையை வன்னமயமாக்குகிற காலகட்டமாகவும் இந்த தாலாட்டு பருவத்தை அணுக முடியும். அவ்வாறான வெளிச்சம் ஓசையை வைத்து ஏற்படுத்தப்படுவதால், ஒரு பார்வையற்ற குழந்தை இருளைக் கண்டு அஞ்சுவது தடுக்கப்படுகிறது, யாருடைய துணையுமின்றி எதிர்காலத்தில் தான் புழங்கும் இடத்தில் நடப்பதற்கும், சுயமாக தனக்குத் தேவைப்படுகிற பொருட்களை எடுத்து பயன்படுத்துவதற்கும் இதுபோன்ற ஓசை மயப்பட்ட தாலாட்டு வழிவகை செய்கிறது, தொட்டிலில் கட்டப்பட்டுள்ள மணிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் எழுப்பக் கூடிய ஓசைகள், அக்குழந்தையின் செவிசார் கவனத்தை ஒருநிலைப்படுத்தி அதன் ஆற்றலை கூர்மையாக்கிட உதவுகின்றது. காதில் விழும் சொல்லுக்கும் அவை சார்ந்த பொருட்களுக்குமான மன பிம்பங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, மொழியை கேட்டுச் சேகரித்து பயன்படுத்துகிற மறு மார்க்கத்தினை இந்த காலகட்டம் சாத்தியப்படுத்துகிறது! ஓசைதணையும் சொற்களையும் அறிவு எனும் நூல் கொண்டு கோர்க்கப்பட்ட மழலை மாலையாக பார்வையற்ற குழந்தை மனம் பரப்ப தொடங்குகிறது இந்த தாலாட்டு பருவத்தில்! இவ்வாறான செயல்பாடுகளோடு நுகருதலையும் அந்த குழந்தை இணைத்துக் கொள்கிறது. அதனைப் பயன்படுத்தி எல்லாவற்றிற்கும் ஆன மனங்களை நுகர்ந்தறிந்து, மனதில் பெருக்கெடுக்கிற கற்பனை நதியில் சேர்த்து விடுகிறது. ஓசையினை அடிப்படையாகக் கொண்டு அனைத்து விதமான அறிவின் செறிவூட்டளையும் இந்த பருவத்தில் பார்வையற்ற குழந்தை செய்து கொள்கிறது!


அன்னையின் தாலாட்டு மற்றும் அதற்கு ஒத்திசையும் குழந்தை என்கிற இரண்டு அழகியல்கள் உரையாடலில் இருக்கும் பொழுது குழந்தையின் கற்பனை தளம் காணுகிற மேம்பாடு, சமூகம் மற்றும் சுற்றுப்புறம் ஆகியவை உள்ளிடப்படும் பொழுது பெரும் மாறுதலுக்கு அல்லது மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. பார்வை உள்ள குழந்தையைக் காட்டிலும் பல மடங்கு ஓசையை பிரித்தறியும் நுட்பம் கொண்ட பார்வையற்ற குழந்தையின் அறிவுப் பெருக்கம் தடைபடுவதை சமூகம் உணர்ந்து தன்னை விழிப்புணர்வுக்கு உட்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதிலும் குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகிய காரணிகள் இவற்றை பக்குவமாக அணுகக்கூடிய கலந்துரையாடல்கள் அரசியல் மற்றும் சமூக தளங்களில் நிகழ்த்தப்பட வேண்டும். தன்னுடைய இருப்பிடம் மற்றும் புறவெளி சூழல் ஆகியவற்றை மாற்றுப் புலனின் மூலம் மிக நேர்த்தியாக நிர்வகிக்கிற பார்வையற்ற குழந்தையின் அசாத்தியம் கல்வி தளங்களிலும் தொழில் தொடர்பான வாய்ப்புகளிலும் ஏற்றுக் கொள்வதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கவனித்திட வேண்டும். மேற்கத்திய நாட்டில் டேனியல் கிரஷ் அவர்களால் மிகப் பெருமளவில் முன்னெடுக்கப்பட்ட எகோ லொகேஷன் (echoe location) என்பதனை தாலாட்டு பருவம் ஒரு பார்வையற்ற குழந்தையின் வாழ்வில் செய்து முடிப்பதை இன்று வரை நம் சமூகம் உணராமல் இருப்பது பெரும் வருத்தத்தை தருகிறது! தாயின் தாலாட்டு இசை புறப்பட்டு மூளை முடுக்கிலும், இங்கு இடுக்கிலும் மோதுவதையும், அதனை கொண்டு குறிப்பறியும் அறிவு தகவமைப்பில் பார்வையற்ற குழந்தை இயல்பாகவே ஆட்படுவதையும், அவை அறிய தருகிற வெளிப்புற வடிவங்களையும், இவைகளுடன் தன்னுடைய இயங்குதல் நிகழ்த்தப்படுவதையும் அவ்வித குழந்தைக்கான எக்கோ லொக்கேஷன் என்று தானே குறிப்பிட வேண்டும்! தாலாட்டு பருவத்திற்குள் பொதிந்திருக்கிற இத்தகைய சிறப்புகள், நன்மைகள், ஆகச்சிறந்த கற்பனைக்கான வார்ப்புகள், மனித உறவில் திறன் பட இயங்கத்தக்க அடிப்படைகள் ஆகியவற்றை தடைபடாமல் பார்வையற்ற குழந்தைக்கு கிடைக்க செய்தால், மனிதவள சமன்பாட்டில் அது மிகப் பெரிய உத்வேகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை!


பார்வையற்ற குழந்தையின் வளர்ச்சியில் இரண்டு முக்கிய அம்சங்கள் இந்த பருவத்தில் முடிவு செய்யப்படுகின்றன. ஒன்று அக்குழந்தையின் செவி இயக்க மேன்பாடு. குறிப்பாக தாலாட்டு இசை காதுகளின் அடுக்குகளில் பயணித்து அவை திறன்பட இயங்கிட துணைபுரிகின்றன. அத்தோடு அவற்றை வெகுவாக தூண்டி, கூர்மைபடுத்தி செவி இயக்கத்தின் முழுமையான ஆற்றலை பெற்றிட உதவி புரிகின்றன. இரண்டாவதாக, தாலாட்டில் வழியே வெளிபட்டிடும் ஓசை தழுவிய சொற்கள், அக்குழந்தைக்கு வார்த்தைகளின் வளத்தையும், அதனை லாவகமாக கையாளும் சிதறல் அற்ற கவனக் குவியலையும் உறுதிபடுத்துகின்றன. மேலும் தாயின் குரலில் ஏற்படும் மாறுபாட்டையும், அத்துடன் கலந்து வெளிப்படும் உணர்ச்சிகளையும் இப்பருவத்திலேயே கிரகித்துக்கொல்வதால், பிற்காலத்தில் குரலை கேட்டவண்ணமே சம்பந்தபட்டவர் கொண்டிருக்கும் மனதின் நிலைதனை, அதாவது, கவலை, ஆற்றாமை, ஏமாற்றம், தவிப்பு, தோல்வி, மகிழ்ச்சி, கோவம், வெறுப்பு, போன்றவற்றை வெகு நேர்த்தியாக கண்டறியும் குரல் நேசகர்களாக அவர்களை வார்க்கிறது! இது அதிசயம் அல்ல அறிவியல். இது கடவுள் தரும் பேராற்றல் அல்ல காதுகள் மூலையில் நேரடி தொடர்பிற்கு உட்படுவதால் நிகழும் எதார்த்தம். சத்தமே சித்தமென இயங்கிட நிகழும் செவி முதல் தாற்பரியம்!


என்னில் அடங்கா சிறப்புகளுடைய தாயின் தாலாட்டு எல்லா பார்வையற்ற குழந்தைகளுக்கும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். குழந்தை பிறந்து ஓரிரு மாதங்களிலேயே பார்வையின்மை கண்டறியப்படுதலும், பெற்றோரின் அறியாமை மற்றும் குடும்பத்தின் வறுமை நிலை போன்றவையும், உளப்பூர்வ தாலாட்டினை அக்குழந்தைகள் பெறுவதில் தடைகளை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு நிகழ்வது பெருந்துயர் மட்டுமல்ல, அந்த குழந்தையின் உணர்வு தலத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் மாறிவிடுகிறது. இதற்கு மாற்றுவழி கண்டறிதல் கடினம். மேலே குறிப்பிட்டவற்றை யோசித்தொமேயானால், இதன் தீவிரத்தை புரிந்துகொண்டிட இயலும். தாலாட்டு பருவத்தின் பயன்களை இழப்பது எதிர்வரும் பலதரபட்ட பருவத்தில், அவர்கள் சுயத்தையும், அடையாளத்தையும், தனித்துவத்தையும், மொழி மற்றும் கற்பனை நிறைந்த படைப்பாற்றலையும் இழப்பதற்கு காரணமாகிவிடுகின்றன. இதனை தடுத்திட வேண்டும். பார்க்கும் திறனற்று ஒரு குழந்தை பிறந்திட்டால், அக்குழந்தை கேட்டலின் வழியே உலகத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வளர்வதை பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் விளக்கி சொல்லிட வேண்டும். கண்ணுக்கு நிகராக, அல்லது கண்ணின் ஆற்றலை காட்டிலும் பல மடங்கு கேட்டிடும் செவி திறனை இத்தகைய பருவத்தில் அன்பு கலந்து வழங்கிடும் தாலாட்டு பாடலின் ஊடே கொடுத்துவிட முடியும் என்பதனை இனியேனும் சமுகம் உணர்ந்திட வேண்டும். அவ்வாறு செய்வது பார்வையுள்ள குழந்தைக்கு சமமாக இவர்களும் வாழ்வில் வெற்றி பெற்று, சுயமரியாதையுடன் வாழ்ந்திட பெரும் துணை புரிந்திடும் என்பது மறுத்திட இயலாத உண்மை!


ப. தாஹிரா.. 

Comments

  1. என்ன ஒரு அற்புதமான படைப்பு ஒரு பார்வையற்ற குழந்தையின் உளவியல் உலகினை பார்க்காமல் படிக்காமல் அனுபவிக்காமல் தன்னுடையஒரு கற்பனை உலகிலேயே கண்டறிய முடியுமா என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சான்று இது கட்டுரை அல்ல உன்னுடைய கற்பனை கலந்த கவி உரையாக தோன்றுகிறது கட்டுரையை திரும்பத் திரும்ப படித்து வியக்கிறேன் மகிழ்கிறேன் வார்த்தை இன்றி வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் எனது அன்பு தோழிக்குவாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை வழங்கிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எழுத்தாக, வா இறைவா!

அவளே ஆயுதங்களுக்கு இலக்கு: