ஒளியற்ற உலகில் அசைந்தாடும் செங்கீரை:

ஒளியற்ற உலகில் அசைந்தாடும் செங்கீரை: 



ஒரு குழந்தையின் உடல் இயக்க வளர்ச்சி என்பது புறம் சார்ந்த பல்வேறு படிநிலைகளைக் கடந்து பெற்றோராலும் மற்றவர்களாலும் கொண்டாடப்படக்கூடிய ஒன்று. அக்குழந்தையின் அங்க அசைவுகளை ஸ்லாகித்து ஊக்குவிப்பதன் மூலம் இங்கு ஏற்றுக்கொள்ளல் என்பது வெளிப்படையாக நடைபெறுகிறது. அத்தகைய ஆரோக்கிய வளர்ச்சிக்கான முகவரி என்பது குழந்தையின் இரண்டாவது பருவமான செங்கீரை பருவத்தில் இருந்து கண்டறியப்படுகின்றது. பார்வையின்மையுடன் பிறந்த ஒரு குழந்தை இப்பருவத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதைப் பற்றி சிந்தித்தல் கூட புறக்கணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அரவணைப்பும் புறக்கணிப்பும் இரு வேறு தராசுகளாக இருப்பினும், அக்குழந்தையின் அடிப்படைக் கற்றல் என்பது இப்பருவத்தில் இருந்து தான் தொடங்குகின்றது என்பது நிதர்சனம். பார்வை தவிர்த்து மற்ற புலன்களின் நுட்பமான ஆற்றலை அக்குழந்தை எவ்வாறு விவேகத்துடன் கையாண்டு, இச்சமுதாயத்தில் எதிர்நீச்சல் இடுவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றது என்பதைப் பற்றி இக்கட்டுறையில் காண்போம். 


 ஐந்தாவது மாதத்தை துவக்கமாகக் கொண்ட செங்கீரைப் பருவமானது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. செங்கீரை எவ்வாறு காற்றில் அசைந்தாடுகிறதோ, அவ்வாறு இந்த பருவத்தில் இருக்கும் குழந்தைகள் ஒரு காலை நீட்டி, மற்றொரு காலை மடக்கி, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை அழகாக அசைத்தாடுவதாக கொள்ளலாம். உடலுக்கும் புறச்சூழலுக்குமான தொடர்புகளை குழந்தைகள் ஏற்படுத்திக் கொள்வதே இதன் சிறப்பு. ஆனால் இங்கு ஒரு பார்வையற்ற குழந்தையின் நிலைப்பாடு என்பது மிக நுட்பமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகின்றது. அக்குழந்தையின் உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் இருக்கின்ற தொடர்பினை மிக நுட்பமாக இத்தகைய பருவத்தில் சிலாகிக்க முடியும். ஆனால் அது நடப்பதில்லை என்பதிலிருந்து தான் தொடங்குகின்றது, பார்வையற்றவர்களின் குடும்பம் மற்றும் சமுதாயம் சார்ந்த இடர்பாடுகள். தொடுதலும் தொடப்படுதலும், நுகறுதலும் நுகரப்படுதலும், உணருதலும் உணர்ந்துக்கொள்ளப்படுதலும், கேட்டலும் கவனிக்கப்படுதலும், ஒட்டுமொத்தமாக அங்கீகரித்தலும் அங்கீகரிக்கப்படுதலும் என உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் இடையே இவ்வாறான செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பார்வையற்ற குழந்தைகளை பொறுத்தவரையில் இந்த செயல்பாடுகள் சாதாரணமானவை அல்ல. உடலையும் சுற்றுப்புறத்தையும் தனிப்பட்ட அலகுகளாக எடுத்துக் கொண்டால், அவை எப்படி ஒன்றிணைய முடியும் என்ற வினாவை எழுப்பி ஆழ்ந்து யோசித்தால், இந்த செயல்பாடுகளின் தவிர்க்க இயலாமை புரியக்கூடும். செங்கீரைப் பருவத்துக் குழந்தைகள் தன்னுடைய இயக்கத்தையும் உடலை மையப்படுத்திய வளர்ச்சியையும் இவற்றால் மட்டுமே உணரத் தொடங்குகின்றன. பொதுவாக புலன் இயக்க உணர்வுகள் ஏற்படுத்துகின்ற பாதிப்பும், அளிக்கின்ற பங்களிப்பும், ஐம்புலன்களை கருவி எனக் கொண்டு சாத்தியப்படுகின்றது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த புலன்களில் ஒன்று முழுமையாக இயங்கவில்லையென்றால் , ஏனையவற்றைக் கொண்டு தான் அந்த குழந்தை புறவெலி கற்றலிலும், தன்னுடைய வளர்ச்சியை உணரும் நிலையிலும் தன்னை பொருத்திக் கொள்ள முடியும். பார்வையற்ற குழந்தைக்கு இந்த பருவம் சவால்களை கொடுத்தாலும், இதர புலன்களின் கூர்மையான இயக்கத்தினால், தன் உடலின் பிற உறுப்புகளின் வழியே சுற்றுப்புறத்தை உள்வாங்கி வளர்கிறது.


தன் உடலை கொண்டாடுதல் என்பது இந்த பருவத்தில் தவிர்க்க இயலாத ஒன்று. குதூகலமான குழந்தையின் அசைவுகளும் துள்ளல்களும் அதற்குச் சான்று. அழுத்தி உன்றப்படும் காலும், நீட்டிய நிலையில் படர்ந்து இருக்கும் மற்றொரு காலும், அத்துடன் இரண்டு கைகள் தாங்கப்பட்ட இடமும், தரை என்பதை தொடுதலின் மூலம் அனுமானித்துவிடுகின்றன. ஒவ்வொரு முறை தன் உடலை அசைப்பதன் மூலம், தனக்கு பலதரப்பட்ட செயல்களை செய்யும் தேகம் இருப்பதை அறிந்து உவகை கொள்கின்றன. தலை, கைகள், மற்றும் கால்கள் ஆகியவை தனித்தனியே தன்னால் இயக்கப்படுவதை வியந்து ஓதுவதையே குழந்தையின் கொண்டாட்டம் எனலாம். பார்வை உள்ள குழந்தைககளின் அங்க அசைவு கொண்டாட்டத்தை பார்வைக் கொண்டு அங்கீகரித்து அதிக உற்சாகம் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பார்வையற்ற குழந்தைக்கு தன் உடல் இயக்க கொண்டாட்டத்தை யாரோ ஒருவர் அங்கீகரித்து வெளிப்படுத்தலும் மற்றும் , அதனை பகிர்ந்து கொள்ளுகிற அனுபவமும் கிடைக்காமல் போகின்றது. அப்பொழுது அக்குழந்தை, தான் பார்வையற்று இருப்பதை தெரிந்து கொள்ளாமல் இருக்கின்ற நிலையில், ஒரு மாறுபட்ட சங்கமத்தின் பூரிப்பில் லயித்து போய்விடுகின்றது. அவை ஒரே நேர்கோட்டில் இயங்குகிறதா என்பது பெரிதன்று. காரணம், உடல், உள்ளம் மற்றும் பலதரப்பட்ட புற வெளி காரணிகளாக அவை இருக்கின்றன.

இம் மூன்றும் ஒன்றை ஒன்று விட்டு விலகாமல், அதே வேளையில் தேவைப்படும்போது வரிசை மாறுபாட்டில் இணங்கியும், அந்தக் குழந்தையின் புலனின்மையை மழுங்கடித்து விடுகின்றன. இங்கு ஏதோ அதிசயம் நடப்பதாகவோ, தெய்வீக ஆசி வழங்கப்பட்டு பார்வையின்மை நிர்வகிக்கப்படுவதாகவோ கருத வேண்டியதில்லை. அவ்வாறு எண்ணுவது உண்மையில் அறிவியலுக்கு புறம்பானது! பார்வையற்ற அந்தக் குழந்தை இயல்பாகவும் இயற்கையாகவும் தன் உடல் கொண்டாட்டத்தை எவருக்கும் காத்திருக்காமல் தன்னளவில் மேற்கொள்ள தொடங்குகிறது என்பதே எதார்த்தம்!


புற உலகத்தோடு தன்னை தொடர்பு படுத்திக் கொள்ள பார்வையற்ற பெண் குழந்தைக்கு மற்றொரு காரணியாக அமைவது ஓசை. காலில் அணியப்படும் தண்டை அல்லது கொலுசு, கழுத்தில் அணிவிக்கப்படும் மணிமாலை, கையில் போட்டுவிடப்படும் அழகிய சின்னஞ்சிறு வளையல்கள் போன்றவை தன் உடலை கொண்டாடிக் கலிப்புற அக்குழந்தைக்கு பேர் உதவி புரிகின்றன. தான் வளர்கிறோம் தன்னால் தனது உறுப்புகளை தன் விருப்பத்திற்கு அசைக்க முடிகிறது போன்ற உத்வேகத்தை இத்தகைய ஓசை தரத்தக்க அணிகலன்கள் தவறாமல் கொடுத்து விடுகின்றன. தனது காலை அதிர்ந்து தரை மேல் அடித்து ஓசை எழுப்பி குதுகளித்துச் சிரிப்பதை சிந்தித்துப் பார்த்தால் இது புரியக்கூடும். இவ்வாறாக அக்குழந்தை பார்வையின்மையை பொருட்படுத்தாமல் ஓசைகளோடு நெருங்கி பழக தொடங்கி விடுகிறது. ஓசையை வைத்து தன் உடலையும், தன் உடல் மேல் பின்னிப்பிணைந்திருக்கும் எழில் மிக்க ஓசை எழுப்பிகளையும் அகத்திற்கும் புறத்திற்குமான உரையாடலாக பயன்படுத்துவதை காணலாம். இப்படித்தான் தன் கொண்டாட்டத்தை அடையாளப்படுத்தி மகிழ்வுடன் ஆர்ப்பரிக்கிறது. இதனை நேர்மறை அடையாளம் ஆக்கி ஊக்குவிப்பதற்கு மாறாக, எதிர்மறை சித்தரிப்புக்கு, சுற்றியுள்ள பார்வை உள்ளவர்கள் சென்றுவிடுவது துரதிஷ்டவசமான ஒன்று.


அடுத்த நிலையில் இந்த பெண் குழந்தை பார்வையின்மையை பொருட்படுத்தாமல் கேட்டலை லாவகமாக கையாள தொடங்கி விடுகிறது. அதற்கு காற்றின் அடர்த்தி போதுமானதாக இருக்கும் என்று சொன்னால் உங்களுக்கு சந்தேகம் வரக்கூடும். ஆனால் அதுதான் மறுக்க முடியாத உண்மை. வீசுகிற காற்றின் அடர்த்தியை பொறுத்து தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அந்த பார்வையற்ற குழந்தை உள்ளத்திற்குள் உருவகப்படுத்தி சுற்றுப்புறத்தை அறிந்து கொள்கிறது. நான்கு சுவர் அறை, பரவலான குறுக்கிடுகள் அற்ற புற வெளி, எவ்வித தடையும் அற்று வீசப்படும் காற்றிற்கே உரிய இடங்கள் போன்றவற்றை அந்த குழந்தை மனதில் நிறுத்த பழகுகிற காலம் இந்த செங்கீரைப் பருவம். இப்பருவத்தின் குறியீடாக திகழும் அந்த நயம் மிக்க உடலியக்க நிலையில் ஒரு பார்வையற்ற குழந்தை தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் பொழுது, மற்றொரு நுட்பமான அதிர்வுகளை தனக்குள் கிரகித்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு எதிர்வினை ஆற்றத் தொடங்குகின்றது. தன்னை நோக்கி தன் அருகில் வரக்கூடியவர்களின் காலடி அதிர்வுகளை, தான் தரையில் ஊன்றி இருக்கும் கைகளின் மூலம் உணரத் தொடங்குகின்றது. அது அக்குழந்தைக்கு ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியையும் பாதுகாப்புனர்வையும் தர வல்லதாக அமைகிறது. இவ்ஒவ்வொன்றிற்கும் ஏற்ற வண்ணம் தன் உடலை இயக்கி பார்த்து தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் இயக்கத்தின் உரையாடலில் அந்த குழந்தை தன்னை அறிதலை நிகழ்த்திக் கொள்கிறது. இதனை பெற்றோர் புரிந்துகொள்ளுதல் என்பது நடப்பதில் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. குழந்தைகள் ஆற்றலுக்கு மட்டுமே உரியவர்கள் என்கிற கண்ணோட்டத்தை தள்ளி வைத்துவிட்டு, குழந்தை தன்னகத்தே எல்லா சிக்கலுக்கும் தீர்வு உடன் வளர்கிற நேர்த்தியை கொண்டிருப்பதாக உற்று நோக்க முன் வந்தாலே போதுமானது. பார்வை உள்ள குழந்தை போல் பார்வையற்ற குழந்தை இல்லையே, அதிலும் பெண் குழந்தை இப்படி இருக்கிறதே என்கிற புலம்பலை குழந்தையின் வளர்ச்சியை உணர்கிற செங்கீரை பருவத்தின் மீது திணித்தல், அதன் இயல்பான மகிழ்ச்சிக்கு கடிவாளம் போடுகிற ஒன்றாக அமைந்து விடுவதை பெற்றோரும் சமூகமும் முன்வந்து புரிந்து கொள்ள வேண்டும்!. 20:42. Read. Window WhatsApp 


ப. தாஹிரா.

Comments

Popular posts from this blog

இருளுக்குள் ஓர் இசைச்சுடர்:

எழுத்தாக, வா இறைவா!

அவளே ஆயுதங்களுக்கு இலக்கு: