சமத்துவமாக்கப்பட வேண்டும் பாதுகாப்பு:
சமத்துவமாக்கப்பட வேண்டும் பாதுகாப்பு:
மனித வாழ்க்கை என்பது பல்வேறு போராட்டங்களைக் கடந்து உணர்வுகளாலும் உரிமைகளாலும் கட்டி எழுப்பப்படும் ஒரு மகத்தான அறச்சாலையாகும். தான் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத எந்த வொரு சமூகமும் ஒரு காலகட்டத்தில் தங்களது உரிமையை நிலை நாட்ட குரல் எழுப்புதல் என்பது நடந்த வண்ணம் உள்ளது. அது அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அறப்போராட்டமாகும். குடும்ப பாதுகாப்பில் தொடங்கி அரசியல் சமூகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவைகளால், ஒரு தனி மனிதனின் உளவியல் சார்ந்த தேவைகளின் பட்டியல் நீண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இவை அனைத்திற்கும் துவக்க புள்ளியாக திகழும் குழந்தை பருவம் முதலே, அவர்களின் சூழலியல் சார்ந்த அளவுகோல்களால் பாதுகாப்பு என்பது மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஆகவேதான் தமிழ் சிற்றிலக்கியங்களில் மிக முக்கிய இடம் வகிக்கும் பிள்ளைத்தமிழ் காப்பியங்கள், குழந்தை பாதுகாப்பினை பாடு பொருளாகக் கொண்டு முதல் பருவ பாடல்களை இயற்றியுள்ளது. இவ்வாறு குழந்தைகளை காக்கும் பொருட்டு நாம் இறைவனிடம் முறையிடும் வேளையில், பார்வை இழந்த குழந்தையின் நிலை என்பது பல்வேறு கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. ஆகவே அக்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மற்றும் இச்சமுதாயத்தின் எதார்த்த மனநிலையை இக்கட்டுறையில் இனி விரிவாகக் காண்போம்.
பிள்ளை தமிழில் இடம்பெற்றுள்ள பத்து பருவங்களுல் முதலாவதாக திகழ்வது காப்பு பருவம். காப்பு என்பதற்கு பாதுகாப்பு என்று பொருள். குழந்தையின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் தெய்வத்திடம் பாதுகாத்திட வேண்டுவதாக காப்பு பருவ பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழந்தையின் பாதுகாப்பு என்பதே அதன் வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. அத்தகைய பாதுகாப்பினை குடும்பம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றில் நிகழும் சூழல் தான் தீர்மானித்து நிர்வகிக்கின்றன. பார்வை உள்ள குழந்தையாக இருப்பின், அந்த பருவத்தில் உள்ள அழகையும் அசைவுகளையும் ரசித்தபடி அக்குழந்தைக்கான பாதுகாப்பினை பெற்றோர் வேண்டுவதாக காணக் கிடைக்கும். குறிப்பாக அந்த குழந்தை தன்னம்பிக்கையுடன், எதார்த்த வாழ்வை புரிந்துணர்ந்து, இடர்கள் மற்றும் விபத்துகள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப் பட வேண்டும் என்று வேண்டுவது இயல்பே. ஆனால் பிறந்த குழந்தை பார்க்கும் திறன் அற்று, அதிலும் அது பெண் பிள்ளையாக இருப்பின், பெற்றோரின் மனநிலை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். வேண்டுதல் மறைந்து புலம்பல் தொடங்கிவிடும். காத்திட வேண்டுதலை விட எப்படி காக்கப் போகிறோம் என்கிற விரத்தி வேர்விட கூடும். அதற்க்கு அடிப்படை காரணம் செயல்படும் உறுப்புடன் பிறக்கும் குழந்தைக்கு பாதுகாப்பு கோருதளுக்கு எதிர்மறையான ஒன்றினை செய்திட நேருதலே. இப்படி குழந்தை செயல்படா உறுப்புடன் இருப்பதை முதலில் ஏற்பதற்கு பெற்றோர் இன்னலுறும் காரணத்தால், அதனை கவலையும் கண்ணீரும் கொண்டு வேதனை ததும்ப அணுக தொடங்கிவிடுகின்றனர்.
ஒரு குழந்தை பிறந்து மூன்று முதல் ஐந்து மாத காலங்களில் காப்பு பருவத்திற்கான பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தலை நிமிர முயற்சித்தல், கை கால்களை அசைத்து உட்சாக ஒலி எழுப்புதல், தன் முன்னால் நிற்பவரின் முகம் பார்த்து புன்னகைத்தல் மற்றும் பொருட்களை அடையாளம் கண்டு விளையாடுதல் போன்றவற்றை இயல்புகளாக கொண்டுள்ளன. இத்தகைய இயல்புகளை எதிர்கொள்ளும் ஒரு பார்வையற்ற குழந்தையின் உளவியல் சார்ந்த அசோகரியங்கள் அப்பொழுது முதலே பண்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற குழந்தைகளை போல் பெற்றோரை அடையாளம் காணுதல் என்பது விழிவழி நிகழ்வதில்லை. மாறாக, தாய் தந்தையரின் குறல் வழியே அக்குழந்தைக்கான அறவணைப்பு உறுதிப்படுத்த படுகின்றது. பொருட்களை தொட்டு எழுப்பும் ஓசையை செவி வழியே உணர்ந்து மகிழ்தல் நடைபெறுகிறது. ஆகவே பிஞ்சு பருவம் முதலே, பார்வையின்மையால் எழும் போராட்டங்கள் குறித்த புரிதலும், அக்குழந்தைகளின் பாதுகாப்பு எத்தன்மையுடையது என்பது குறித்த விழிப்புணர்வும் பெற்றோர்களின் மத்தியில் ஏற்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். குடும்பம் மற்றும் சமுகம் வழங்கிட வேண்டிய பாதுகாத்தல் உளவியல் தொடர்பானதாக கருதப்படுகின்றது. அன்பு, அரவணைப்பு மற்றும் தைரியம் கொடுத்து காக்கும் இடமாக குடும்பமும், ஆதரவு, அங்கிகாரம் மற்றும் சம வாய்ப்பு தடை இன்றி ஏற்படுத்தி காக்கும் ஒன்றாக சமூகமும் இருக்கும்படி வேண்டுதல் அவசியம். ஆனால் அது நடப்பதற்கான வாய்ப்புகள் அரிது என்பதே கவலை தரும் எதார்த்தம்.
மேலும் அந்த பார்வையற்ற பெண்குழந்தைக்கு விடா முயச்சி, தன்னம்பிக்கை போன்றவையே ஆகப்பெரும் கவசம் என்பதனை உணர்ந்து அவற்றை அக்குழந்தை நிரம்ப பெற்றிட வேண்டுதல் அரங்கேறுவது மிகப்பெரும் கேள்விக்குறியே. பெற்றோரின் பிரார்த்தனை இல்லாமை என்பது நேர்மறை துவக்கமற்ற உளவியலை பெறுகிற நிலைக்கு அந்த குழந்தை தள்ளப்படுகிறது. குழந்தை வருகை என்பது ஒரு குடும்பத்திற்கு வாராது வந்த வரமென கொண்டாடும் நிகழ்வு. ஆனால் பார்வையற்ற குழந்தையை பெற்ற குடும்பத்தில், அது சாபமென்றுப் பாவமென்றும் எண்ணும் அறியாமையே மண்டி கிடக்கின்றது. இந்த சீரற்ற மனநிலையால், தன் குழந்தை பெருவாரியான கற்றலையும் உணருதலையும் தொடுதல் சார்ந்தே பெறவேண்டி இருப்பதையும் அறிய முற்படா பெற்றோர், அதி முக்கியத்துவம் வாய்ந்த நுன்னரிவுற்கு எவ்வித வேண்டுதலும் மேற்கொண்டிருக்க வாய்ப்பே இல்லை. புறம் சார்ந்த இயலாமையிலேயே இக்காலக்கட்டத்தை கடக்க கற்பிக்க பட்டுள்ளனர். அந்த உணர்வு ஏற்படுத்தும் தாக்கம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் படுகிறதோ என்கிற அச்சத்தை புறம் தள்ள முடியவில்லை. தொடுதல் மூலம் தான் பார்வையில்லா அந்த பெண் குழந்தை பெற்றோர் உள்ளிட்ட உறவுகளையும், இதர பொருட்கள் மற்றும் சுற்றுப் புறத்தையும் கிரகித்து அறிய முடியும். ஆகவே காப்பு பருவத்திற்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவில், குழந்தையின் பாதுகாப்புக்குறித்து பெற்றோர்கள் இறைஞ்சிடும் வேளையில், பார்வையற்ற குழந்தையின் பெற்றோர் பார்வைக்கு நிகரான தொடு உணர்வு மற்றும் செவி திறன் உள்ளிட்ட இதர புலன்கள் சார்ந்த எச்சரிக்கையுடன் அவற்றை கையாளுதல் வேண்டுதலுக்கு நிகரான ஒன்றாக தீர்மானிக்கப்படுகின்றது.
பார்வையற்ற பெண் குழந்தைகளின் இழப்பு என்பது எண்ணற்றவை. இயக்கமற்ற உறுப்பின் மீது கவலை அதிகம் படர்ந்து நிழலாடுவதால், அழகுடன் செயல்படும் அக்குழந்தையின் சிரித்து மகிழும் ஓசை, முகபாவனை இதர உடல் அசைவுகள் போன்றவற்றை கண்டு பூரிப்படைவது தவிர்க்கப்படுகின்றது. பார்வையின்மையை அதிர்ச்சி என மனதில் நிறுத்துவதால், குழந்தையின் உடல் மொழிகளை ஸ்லாகித்து அவற்றை பிள்ளை தமிழ் இலக்கியங்களில் காத்திட பாடுவது போல வேண்டுதற்கு நிகராக, இங்கு எதுவும் தென்படுவதில்லை. உண்மையை அழுத்தமாக சொல்வதென்றால் அதற்கான அறிகுறி மிக சொற்பமாகவே காணப்படுகின்றது. பார்வை கொண்டு கவனித்தல் அந்த குழந்தைக்கு தான் இல்லையே தவிர, அக்குழந்தையை ஈன்றெடுத்த பெற்றோருக்கு இருக்கிற பொழுது, அவர்கள் அந்த குறை எனப்படுவதை புறந்தள்ளிவிட்டு, காக்கப்பட வேண்டிய இதர உடலியல் செல்வங்களுக்காக வேண்டுதலில் தங்களின் எண்ணத்தை ஒப்புவிக்காமல் கவலையிடம் தங்களை இழக்கின்றனர். தும்பைப் பூ போன்ற பெண் குழந்தையை தூக்கி இன்புறாமல், துயரத்தை சுமந்தபடி வளர்க்கின்றனர்.
பிள்ளைத்தமிழ் பாடப்பட்ட காலத்தில் இருந்து நவீனத்துவம் வளர்ந்து சிகிச்சைகள் பெருகிய இக்காலம் வரை, இத்தகைய ஈடுபாடு இன்மை மாறாமல் தொடர்வதை இந்த சமூகம் தவறு என உணர்ந்ததாக தெரியவில்லை. கல்வி தான் எதிர்காலத்தில் அக்குழந்தையை காக்க போகின்ற மிகப்பெரிய செல்வமென்று இருக்க, அதற்கான வேண்டுதலும் முயற்சியும் பெற்றோரின் வசம் ஒப்படைக்கப்படுகின்றது. சமூகத்தால் முடிவு செய்யப்பட்ட இந்த குறைபாட்டை வைத்துக்கொண்டு அந்த குழந்தை சம வாய்ப்புடன், சமூக அங்கீகாரத்துடன், எவ்வித புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்படாமல், வளர்ந்து ஆளாகி வெற்றி நடை போட்டிட எல்லாம் வல்ல இறைவன் காத்து வழிநடத்த வேண்டும் என்கிற அத்தியாவசிய வேண்டுதல், கவலை உள்ளிட்டவற்றின் குறுக்கிட்டாள் பெற்றோரிடமிருந்தும் குடும்பத்தாரிடமிருந்தும் அப்புறப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஆகவே இத்தகைய குறைபாடுகள் நீர்த்துப் போகும் விதமாக பார்வையற்ற பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட வேண்டும். பார்வையற்ற மழலைகள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் எவ்வாறு அவர்களின் தன்னம்பிக்கையாக சுடர் விடுகின்றது என்பதை பாடுபொருளாகக் கொண்டு பல பாடல்கள் புனையப்பட வேண்டும்.. காப்புப் பருவ திங்களில் பார்வையற்ற குழந்தைகளிடமிருந்து வெளிப்படும் அழகியலும் ஆராதிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதால் மட்டுமே பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் அடித்தொழிக்கப்பட்டு, சம வாய்ப்புகளும் சம உரிமையும் நிலைநாட்டப்படுவதை நம்மால் உணர முடியும்.
ப. தாஹிரா.
Comments
Post a Comment