பத்து பருவங்களும் பார்வையற்ற பெண் குழந்தைகளும்

பத்து பருவங்களும் பார்வையற்ற பெண் குழந்தைகளும்:




வாழ்க்கை என்பது வெறும் எழுத்துக்களின் கோர்வை மட்டும் அல்ல. அது பல தேடல்களின் சுவடுகளை வழி நெடுகிலும் பதித்து, பற்பல அனுபவங்களை கடந்து, காலத்தின் ஏடுகளில் தனக்கென்று ஒரு பக்கத்தை நிரப்பும் அரம் சார்ந்த நேர்த்தியான பயணம். இத்தகைய பயணம் தடைகள் இன்றி ஒரே நேர்கோட்டில் சென்று வெற்றி பெற வேண்டுமேனில், உடல் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகிய இரண்டு சக்கரங்களின் அச்சும் முறியாமல் இருக்க வேண்டியது இன்றியமையாதது. அவை இரண்டும் குழந்தை பருவத்து நாட்களிலேயே தீர்மானிக்கப் பட்டுவிடுகின்றன. அது பாலினம் பொறுத்து மாறுபடுவதும், அதிலும் உடல் குறைபாட்டுடன் பிறத்தல் நடந்தால், எதார்த்த வாழ்வியல் அழுத்தத்தால், பெரும் தாக்கத்திற்கு அவை இரண்டும் உட்படுவதும் அதிகம் கவனிக்க படாமல் போய்விடுகிற செயல் இடைவிடாது நிகழ்கிறது.


கலை நுட்பம் ததும்பும் மழலை பருவம் என்பது மானுட வாழ்வில் திரும்ப கிடைத்திடாத ஒரு வசந்தகாலம். இத்தகு சிறப்பு மிக்க மழலை பருவத்தை பத்தாக பிரித்து செழுமை மிகு தமிழிற்கு தந்தருலிய சான்றோர்கள் பலர். அவை: காப்பு, செங்கீரை, தாள, சப்பாணி, முத்த, வருகை, அம்புலி, ஆகிய எழும் இருபால் மழலைகளுக்கும் பொதுவாக இருக்க, கடைசி மூன்றும் வேறுபட்டு வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு நீராடல், அம்மானை ஊசல் என்றிருக்க, ஆண் குழந்தைகளுக்கு சிற்றில், சிறுபறை, சிறு தேர் என்பதாக சுவையுடன் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான பருவங்கள் பிள்ளை தமிழ் கூறுகளாக பகுக்கப்பட்டு, இறைவனையோ அல்லது அரசர்களையோ பிள்ளை என பாவித்து, தமிழ் இலக்கியம் மழலை தமிழ் அழகியலுடன் புனையப்பட்டு இருக்கிறது. 


இக்கால எதார்த்த சூழலிலும், பாமர இல்லற வாழ்வியலிலும், குழந்தையும், அவை எழில் கொஞ்சிட வெளிபடுத்தும் உடலின் சின்ன சின்ன அசைவுகளும், அறிவுடன் பேசி புலப்படுத்தும் மழலை மொழிகளும் வெகுவாக ரசிக்கப் படுகின்றன. உணர்வுகள் மேலோங்கும் குழந்தைகளின் அங்க அசைவுகள் தாய் தந்தையருக்கு காண கிடைக்காத வரமே. குறிப்பிட்டு சொல்வதெனில், மழலைகளின் பொன் சிரிப்பு, ஒரு காலை மடக்கி மறு காலை நீட்டி தலை அசைத்து முகம் பார்த்து வெளிப்படுத்தும் மலர் மணக்கும் புன்னகை, கைகளை தட்டி ஓசை எழுப்பி தென்றலென மகிழ்தாடுதல், பெற்றோரை அடையாளம் கண்டுணர்ந்து வெண்பனி முத்தம் வழங்குதல், அழைத்ததும் நதியென தத்தித் தவழ்ந்து ஓடோடி வருதல், அன்னை சுவை உணவு ஊட்டிட நிலா பார்த்து அதுவே பிரதிபலிக்க சிரிப்பது, நிலாவின் அழகை குழந்தைகள் குதுகலத்துடன் கண்டு கொண்டாடி கழிப்பதை, அவர்தம் பெற்றோர் வியந்தபடி உவகை கொள்வது இயபாக அரங்கேறுகிறது. இவ்வாறே எல்லா பருவங்களும் அனுபவித்து உணர்வு பூர்வமாகவே பார்க்கப் படுகின்றன.


இதுவே ஒரு குழந்தை, அதிலும் பெண் குழந்தை பார்வையற்று பிறக்க நேரிட்டால், இத்தகு பருவ படிநிலைகளும், அவை சார்ந்த கொண்டாட்டங்களும் அடைந்திடும் எதார்த்தங்களை இலக்கியங்கள் பேசவில்லை. ஆனால் அவை கட்டாயம் இப்பொழுதேனும் பேசப்பட வேண்டும். அது அந்த குழந்தையீன் உளவியலிலும் உடல் சார் வளர்ச்சியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பருவத்தையும் பார்வையற்ற பெண் மழலை எங்கனம் கடக்க நேரிடுகிறது, அப்பொழுது பெற்றோரின் மன ஓட்டம் எவ்வாறாக இருக்கிறது போன்றவற்றையும் அலசுவது மிகவும் அவசியம். இவர்கள் இருவரின் உளவியலையும் பொது சமூகமும், பண்பாட்டு வழக்காறுகளும், கலாச்சார கற்பிதங்களும் எங்கனம் பெரும் பாதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பதும் பேசப்பட வேண்டும். விளையாடுதல் மற்றும் புற உலகை கண்டு அதனை அப்படியே தத்ரூபமாக வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இல்லாமையால், அந்த குழந்தை எவ்வாறு புறக்கணிப்பிற்கும், இயல்பான மற்றும் இயற்கையான செழுமை படுத்துதளுக்கும் வாய்ப்பற்று போகும் நிலை இருக்கிறது என்பதும் நுட்பமாக கவனப் படுத்தப்பட வேண்டியுள்ளது. கலை நயத்துடன் கடக்க வேண்டிய ஒவ்வொரு பருவங்களும் ஒரு பார்வையற்ற பெண் குழந்தைக்கு சவால்கள் நிறைந்ததாக மாறுகிறது என்பது நம்மால் மறுக்க இயலாத உண்மை. தன்னை சுற்றி இருள் பொதிந்திருக்கும் வேளையிலும், தனது செவி மற்றும் தொடு உணர்வுகளால் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மொழிபெயர்க்கப்படுவதன் வாயிலாக, தனக்கான உலகை அடையாளம் காண்பதிலிருந்து தொடங்குகிறது ஒரு பார்வையற்ற குழந்தையின் போராட்டம் மிகு வாழ்க்கை பயணம். இதுவே அக்குழந்தையை தன்னம்பிக்கை நிறைந்த முழு மதியாய் திகழச் செய்கிறது.


ஆனால் இத்தகைய நிலைப்பாட்டில் போதிய அளவு அறியாமையை வெளிப்படுத்தும் நம் சமுதாயம், பார்வையற்ற குழந்தை பிறப்பதை அவமானத்தின் குறியீடாகவும் விதியின் சாபமாகவும் உருவகித்து, அக்குழந்தைக்கென்று அமைத்து தர வேண்டிய அனைத்து எதார்த்த சூழ்நிலைகளையும் மருதலித்து விடுகின்றது. பாவத்தின் சின்னமாக உருவகப்படுத்தி பரிதாபத்தால் மட்டுமே அக்குழந்தை வளர்த்தெடுக்கப்படுகின்றது. தனது மழலைச் செல்வத்தின் அங்க அசைவுகளால் பூரிக்கும் பெற்றோர், அதனை தன் சுற்றத்தாறோடு பகிர்ந்து கொள்வதில் அசோகரியம் ஏற்படுவதால், அவர்களது மகிழ்ச்சி புறக்கணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றது. ஆகவே, தொந்நூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுல் ஒன்றாக திகழும் பிள்ளைத்தமிழ், இறைவனையோ அரசரையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எவ்வாறு பாடப்பட்டுள்ளதோ, அதெப் போன்று வாழ்க்கை பேரிடருக்குள் முட்டி மோதி மலர்ந்து வரும் பார்வையற்ற பெண் குழந்தைகளை மையமாகக் கொண்டு, பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பத்து பருவங்களை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு கட்டுரையும் இனி உங்களிடையே வலம் வர உள்ளது.


ப. . தாஹிரா.. 19:00.  

Comments

Popular posts from this blog

இருளுக்குள் ஓர் இசைச்சுடர்:

எழுத்தாக, வா இறைவா!

அவளே ஆயுதங்களுக்கு இலக்கு: